Friday, February 19, 2010

இந்தியாவின் சொந்த முள்வேலி முகாம்கள்!

உக்கிரமான போர் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. வெறிகொண்ட பெரும்பான்மை இனம் ஒன்றால், அப்பாவி சிறுபான்மை இனம் எதுவும் அழிக்கப்பட்டுவிடவில்லை. போர் விமானங்கள் தாழப் பறந்து பாஸ்பரஸ் குண்டுகளையும் கிளஸ்டர் குண்டுகளையும் மழையாகப் பொழிந்து அப்பாவிகளை சாகடித்துவிடவில்லை. மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகளையும் பெண்களையும் மட்டுமே ராணுவ வீரர்கள் குறிபார்த்து சுட்டு, மரணத்தின் எல்லைக்கு அனுப்பும் கொடூரம் அங்கு நடந்துவிடவில்லை.

ஆனால் இத்தனை கொடூரங்களும் நிகழ்ந்த இலங்கையின் தமிழர் பகுதிகளில், முள்வேலி முகாம்களில் தமிழ் மக்கள் நடைபிணங்களாக வாழ நேர்ந்த அவலத்துக்கு சற்றும் குறையாத அவலத்தோடு இந்தியாவிலும் முள்வேலி முகாம்களில் நம் சொந்த தேசத்துக்கு மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஒருவர், இருவர் இல்லை... கிட்டத்தட்ட ஒரு லட்சம் இந்தியர்கள் இப்படி திறந்தவெளி முள்வேலி முகாம்களுக்குள் சிறைபட்டுக் கிடக்கிறார்கள். ‘ஒரு கிராமத்தைக் காப்பாற்ற ஒரு நபரை பலி கொடுப்பதில் தவறில்லை’ என்று புராணங்களையும் வேதங்களையும் மேற்கோள் காட்டி சொல்வார்கள். அப்படி நூற்று பத்து கோடி இந்தியர்களின் பாதுகாப்பை காரணம் காட்டி, இந்த ஒரு லட்சம் மக்களை மத்திய அரசே முள்வேலி சிறைக்குள் அடைத்திருக்கிறது.


இதன் முழுமையான விவரங்களைத் தெரிந்துகொள்ள இந்திய - வங்க தேச எல்லைக்குப் போகவேண்டும்...

மூன்றுபுறமும் கடலால் சூழப்பட்ட நம் இந்தியாவுக்கு மிக நெருக்கமான அண்டை நாடு வங்க தேசம். வேறு எந்த தேசத்தையும்விட அதிகமாக பொது எல்லையை நாம் பகிர்ந்துகொள்வது வங்க தேசத்துடன்தான்! இந்திய - வங்க தேச எல்லை என்பது கிட்டத்தட்ட 4095.7 கிலோமீட்டர் நீளமானது.
இந்தியாவுக்கு மேற்கில் இருக்கும் பாகிஸ்தானுடனான நில எல்லையை இந்திய ராணுவம் விழிப்போடு கண்காணிக்கிறது. அதனால், தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து நாச வேலை நிகழ்த்துவது, 500 ரூபாய் கள்ள நோட்டுகளை இந்தியாவுக்குள் சப்ளை செய்து பொருளாதாரத்தை சீர்குலைப்பது, தங்களால் மூளைச்சலவை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு ஆயுதங்கள் கடத்திக்கொண்டுபோய் தருவது... என எதையுமே பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யால் இந்த எல்லை வழியாகச் செய்யமுடியவில்லை. வங்க தேசம் பொதுவாக இந்தியாவோடு நல்லுறவோடு இருப்பதால், அந்த எல்லையில் அவ்வளவு கெடுபிடியாக இந்தியா இருந்ததில்லை. இதனால், அந்த வழியாக இந்தியாவுக்குள் நாசவேலைகள் நிகழ்த்த ஆட்களை அனுப்ப ஆரம்பித்தது பாகிஸ்தான். பொடிநடையாகவே யார் வேண்டுமானாலும் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்துவிட முடிகிற நிலை.

இவ்வளவு நீளமான எல்லையை 24 மணி நேரமும் கண்காணிக்க எல்லை பாதுகாப்புப் படையில் போதுமான ஆட்கள் இல்லை; அதோடு இது அதிக செலவு பிடிக்கும் சமாச்சாரம். ஆகவே எல்லையில் கம்பிமுள் வேலி அமைத்துவிட்டு, அவ்வப்போது எல்லை பாதுகாப்புப் படை கண்காணிக்கலாம் என மத்திய உள்துறை முடிவெடுத்தது. கடந்த 86ம் ஆண்டு வேலி போடும் பணி தொடங்கியது. இறுக்கமான கம்பிவலைகளால் பின்னப்பட்ட வேலி; ஆங்காங்கே எல்லை பாதுகாப்புப் படையினருக்கான கண்காணிப்பு கோபுரங்கள். இப்படி எலிகள் கூட எல்லை தாண்ட முடியாத இறுக்கமான பாதுகாப்பு. கடந்த டிசம்பர் மாதம் வரை 2677 கிலோமீட்டர் தூர எல்லையை வேலி போட்டு அடைத்தாகிவிட்டது. மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா, மிஸோரம், மேகாலயா என பல மாநிலங்களைத் தொட்டு நீள்கிறது இந்த வேலி.

நல்ல விஷயம்தானே என்கிறீர்களா... ஆனால் எந்த நல்ல விஷயத்தையும் நல்லவிதமாகச் செய்து நமக்குப் பழக்கமில்லையே!

இந்த முள்வேலி போடும் பணியை தனியாருக்கு கான்டிராக்ட் விடாமல் மத்திய அரசு நிறுவனங்களான நேஷனல் பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷனும் நேஷனல் ப்ராஜக்ட்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கார்ப்பரேஷனும் இணைந்து செய்துவருகின்றன. இந்தியாவுக்கும் வங்க தேசத்துக்கும் பெரிதாக எதுவும் எல்லைப் பிரச்னைகள் இல்லை. ஆனாலும் இருநாடுகளின் சர்வதேச எல்லையாக வரையறுக்கப்பட்டிருக்கும் பூஜ்யக்கோட்டில் சரியாக வேலி போடாமல், இந்திய எல்லைக்குள் 137 மீட்டர் தள்ளி வேலியை அமைக்க முடிவெடுத்தது மத்திய அரசு. ஆனால் வேலி போட்ட அரசு நிறுவனங்கள், தங்கள் விருப்பத்துக்கும் வசதிக்கும் ஏற்றபடி இந்த வரையறையை ஆங்காங்கே தளர்த்திக்கொண்டதன் விளைவு... சில இடங்களில் சர்வதேச எல்லையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் வரை உள்ளடங்கி வேலி அமைக்கப்பட்டது.

இதனால் இரண்டுவகை பாதிப்புகள்... ஏற்கனவே போட்ட திட்டப்படி 137 மீட்டர் இந்திய எல்லைக்குள் உள்ளடங்கி வேலி அமைத்தாலே, ஏராளமான இந்திய நிலம் வேலிக்கு அப்பால் வங்க தேசத்தின் கட்டுப்பாட்டுக்கு போய்விடும். சீனா சில அடி தூரம் நகர்ந்து வந்தாலே, அமெரிக்கா வரைக்கும் கேட்கிற அளவு சத்தமாக கூப்பாடு போடுகிற நமது அரசு, இப்படி வங்க தேசத்துக்கு தாரை வார்த்த நிலம், எத்தனை சதுர கிலோமீட்டர் என்ற கணக்கு யாரிடமும் இல்லை. குறிப்பாக அசாம் மாநிலத்தில் இந்த எல்லை ரொம்பவே உள்ளடங்கி வருகிறது.

நிலங்களைக்கூட விடுங்கள்... அங்கு வாழும் மக்கள்?

‘அசாமில் மட்டும் இப்படி 149 இந்திய கிராமங்கள் வேலிக்கு அப்பால் போய் வங்க தேசத்துக்குச் சொந்தமாகிவிட்டன. கிட்டத்தட்ட 90 ஆயிரம் மக்கள் வேலிக்கு அப்பால் போய்விட்டார்கள்’ என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார் மாநில தகவல் ஆணையர் ஆர்.எஸ்.மூஷாஹரி.

இப்படி வேலிக்கு வெளியே, இரு நாடுகளின் சர்வதேச எல்லைக்கோடு வரை இருக்கும் பிரதேசத்தை, ‘யாருமற்ற நிலம்’ ( நோ மேன்’ஸ் லேண்ட்) என பொதுவாக வர்ணிப்பார்கள். இந்த யாருமற்ற நிலத்துக்குள் அவர்களை பிணைக்கைதிகளாக்கி சிறை வைத்துவிட்டது இந்தியா.

சட்டப்படி அவர்கள் இந்தியர்கள்; வசிப்பது இந்திய நிலத்தில்; ஆனால் இந்தியா தனக்குத்தானே வரையறுத்துக்கொண்ட ஒரு எல்லையைத் தாண்டி வசிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு அவர்கள் ஆளாகிவிட்டார்கள். இந்திய அரசு செயல்படுத்தும் எந்த நலத்திட்ட உதவியும் அவர்களுக்குக் கிடைக்காது. குடிநீர் குழாய்கள் கிடையாது; மின்சாரம் கிடையாது; மருத்துவ வசதிகள் எதுவும் கிடையாது; தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற பிழைப்புக்கான வழிகள் கிடையாது. மிக முக்கியமாக எல்லையில் தீவிரவாதிகளின் சுலபமான இலக்காகிவிட்ட இவர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்புகூட கிடையாது. வேறொரு தேசத்தின் கருணையில் வாழவேண்டிய கட்டாயத்தில் அவர்களை ஆழ்த்தியிருக்கிறது நம் அரசு.

அந்தப்பக்கம் சர்வதேச எல்லை தாண்டி வங்க தேசத்திலும் போய் அவர்கள் பிழைப்பு தேடமுடியாது. அப்படிப் போனால், சட்டவிரோதமாக நுழைந்ததாக குற்றம் சாட்டி சிறையில் அடைத்துவிடுவார்கள்.

மொத்தமாக வேலி தாண்டி சிறைப்பட்ட கிராமங்களின் நிலை இது என்றால், வேறு சில கிராமங்கள் துண்டாடப்பட்டுவிட்டன. வீடுகள் வேலிக்கு வெளியே இருக்கும்; அங்கு வசிப்பவர்களின் நிலங்களும் மீன் குட்டைகளும் வேலிக்கு உள்ளே இருக்கும். மார்க்கெட், ரேஷன் கடை எல்லாம் இந்தப் பக்கத்தில்தான் இருக்கும். அண்ணன் வேலிக்கு அப்பாலும், தம்பி வேலிக்கு உள்ளேயும் என துண்டாடப்பட்ட சொந்தங்களும் நிறைய!

சிறையில் இருக்கும் கைதிகளைக்கூட, மனு போட்டு உறவினர்கள் போய் பார்ப்பது உண்டே... அப்படி இந்த முள்வேலி இந்தியர்களுக்கும் சில சலுகைகளைக் கொடுத்திருக்கிறது அரசு. வேலிக்கு நடுவே ஆங்காங்கே எல்லை பாதுகாப்புப் படையின் கண்காணிப்பு கோபுரத்தை ஒட்டி கதவுகள் உள்ளன. இந்த கதவுகள் வழியாக இவர்களை இந்தியாவுக்குள் வர அனுமதிக்கிறார்கள். காலையில் 6 மணியிலிருந்து 7 மணி வரை, 9 மணியிலிருந்து 10 மணி வரை, மதியம் 1&2, மாலை 4&5 என மொத்தம் நான்கு மணி நேரத்துக்குள் அவர்கள் அந்தப் பக்கமிருந்து இந்தப் பக்கம் வரலாம். மற்ற நேரத்தில் பிரசவ வலியே எடுத்தாலும், வேலிக்கு அப்பாலே இருந்து பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்! அதோடு இப்படி வந்து போகும்போது எதை எதை எடுத்துப் போகலாம் என கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. ஒரு கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இப்படி ஒவ்வொன்றுக்கும் அளவு உண்டு. வேலிக்கு இந்தப்பக்கம் ரேஷன் கடைக்கு வந்து தங்கள் குடும்பத்துக்கு மொத்தமாக எதையும் வாங்குவது யாருக்கும் சாத்தியமில்லை. வேலிக்கு அப்பால் நிலம் வைத்திருப்பவர், அங்கு விளைந்த எதையும் எடுத்துவரவும் முடியாது; நல்ல விலைக்கு விற்கவும் முடியாது. பெரும்பாலும் மூங்கிலை வெட்டி பிழைப்பு நடத்தும் கிராமவாசிகள் இவர்கள். ஒரு துண்டு மூங்கிலைக்கூட இந்தப் பக்கமிருந்து அந்தப் பக்கம் கொண்டுபோய் விற்கமுடியாது.

ஒற்றை வேலியால் வாழ்விழந்த இவர்களுக்கு இழப்பீடு தரவோ, வேலிக்கு இந்தப்பக்கம் மாற்றுக் குடியிருப்புகளை ஏற்படுத்தித் தரவோ அரசு இதுவரை யோசிக்கவில்லை என்பது வேதனை! ‘வேலிக்கு வெளியே வசிக்கும் இந்தியர்கள்’ என்று இவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ‘சந்திரயானில் ஏறிப்போய் நிலவில் காலடி வைக்கவேண்டும் என்ற பேராசை எல்லாம் எங்களுக்குக் கிடையாது. எங்கள் குழந்தைகள் அழுக்குக் குட்டை தண்ணீரைக் குடித்து, பேதியாகி செத்துக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்காக குடிநீர்க் குழாயாவது போட்டுத் தாருங்கள் என்றுதான் கெஞ்சுகிறோம்’ என்று புலம்பும் இவர்களின் குரல் யார் காதுகளிலும் விழாதது ஏன்?

ஒருவேளை ஏதாவது தேர்தல் வந்து, ராகுல் காந்தி ஏதாவது சாகசப் பயணம் மேற்கொண்டால்தான், இப்படி ஒரு வேதனை வாழ்க்கையில் தவிக்கும் இந்தியர்களின் சோகம் சக இந்தியர்களுக்கே தெரியுமோ என்னவோ...




பின் குறிப்பு: இது சொந்தமாக எழுதியது கிடையாது. சேருபவருக்கு சேர வேண்டும் என்பதற்காக காப்பியடித்தது. உங்களால் முடிந்தால் இதை சிவகங்கை வேங்கை இடம் சேர்த்து விடுங்கள்.

No comments:

Post a Comment