Friday, March 12, 2010

மாவோயிஸ்ட்டுகள்

மேற்கு வங்க மாநிலம் லால்கர், மிட்னாபூர் ஆகிய மாவட்டங்களிலும், சட்டீஸ்காரின் பஸ்தார் பகுதி என்றழைக்கப்படும் அம்மாநிலத்தின் தென் பகுதியிலுள்ள 5 மாவட்டங்களிலும், ஜார்க்கண்ட், பீகார் மாநிலங்களில் பழங்குடியினர் வாழும் மாவட்டங்களிலும் உள்ள கனிம வளத்தை கைப்பற்றுவதற்காகவே அங்கு பன்னெடுங்காலமாக வாழ்ந்துவரும் பழங்குடியினரை வெளியேற்ற மேற்கொண்ட திட்டமிட்ட தொடர் முயற்சியே தொடர்ந்துவரும் ஆயுத மோதலிற்குக் காரணம். அவர்களை வெளியேற்றியே தீருவது என்பதில் முனைப்பாக இருந்த மாநில அரசுகளும், அப்பகுதியின் கனிம வளங்களைத் தோண்டி எடுக்க வந்த தனியார் நிறுவனங்களும் ஒரு அடியாட்கள் படையை உருவாக்கின.

சல்வா ஜூடும் என்ற அந்தப் படை பழங்குடியினரை வேட்டையாடத் துவங்க, அப்பகுதியில் இயங்கிவந்த மாவோயிஸ்ட்டுகள் அதனை தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, பாதிப்பிற்குள்ளான பழங்குடியினருக்கு ஆதரவாக தாக்குதலில் ஈடுப்பட்டனர். இந்த விவரங்கள் யாவும் சட்டீஸ்கர் மாநிலம், தாண்டிவாடா மாவட்டத்தில் பழங்குடியினரிடையே தங்கி 17 ஆண்டுகளுக்கு மேல் தொண்டாற்றிவரும் காந்தியவாதியான ஹிமான்சு குமார் சென்னையிலும், மும்பையிலும், மற்ற நகரங்களுக்கும் சென்று வெளிப்படுத்தினார்.

தாண்டிவாடா மாவட்டத்தில் மட்டும் 644 கிராமங்களில் வாழ்ந்த 4.5 இலட்சம் பழங்குடியினர் அடித்து, அடர்ந்த காடுகளுக்குள் துரத்தப்பட்டுள்ளனர் என்ற உண்மையை கூறிய ஹிமான்சு குமார், அங்கு உண்மையில் நடப்பது என்ன என்பது குறித்து உள்துறை அமைச்சருக்கு தெரிவிக்கத் தயார் என்றும் கூறினார்.

இந்தச் செய்திகள் எல்லாம் பெருவாரியான ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டன என்றாலும், உண்மையை வெளிக்கொணர்வதில் அக்கறை கொண்ட பத்திரிக்கைகளிலும், இணையங்களிலும் வெளிவந்தது.

எனவே, இந்தியாவின் கனிம வளங்கள் நிறைந்த தண்டகாரண்யம் என்றழைக்கப்படும் அந்த மத்திய இந்தியப் பகுதி மாவட்டங்களில் உண்மையிலேயே மக்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருவது யார் என்ற உண்மை வெளியுலகத்திற்கு தெரிந்துவிடாமல் மறைப்பதற்காகவே அங்கு மனித உரிமை ஆர்வலர்களையோ அல்லது ஊடகவியலாளர்களையோ மத்திய, மாநில அரசுகளும், மாவட்ட நிர்வாகங்களும் அனுமதிப்பதில்லை.

இது ‘மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிரான நடவடிக்கை’ என்று கூறப்பட்டாலும், அது அங்கு வாழும் பழங்குடியினரை விரட்டவும், அவர்கள் வாழ்ந்துவரும் கனிம வளமிக்க நிலங்களைக் கைப்பற்றவும்தான் என்பது விவரம் அறிந்த அனைவரும் அறிந்ததுதான்.

அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையின் நோக்கம் மக்களைக் காப்பதற்கா அல்லது ஆதிவாசிகளின் வசம் உள்ள கனிம வளம் கொண்ட இடங்களை அவர்களிடமிருந்து பறிப்பதற்கா என்பதை அறிய அங்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்கட்டுமே? எதற்காக இரகசிய நடவடிக்கை?

அமைப்பு மக்களுக்காகவா அல்லவா என்ற மாவோயிஸ்ட்டுகள், நக்ஸலைட்டுகள் ஆகியோரின் கேள்வி இருக்கட்டும். இன்றைய அரசு மக்களுக்காகவா? என்ற கேள்விக்கு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு அரசு பதில் சொல்லட்டும்.